மணிலா: தென்சீனக் கடலில் இணைந்து சுற்றுக்காவலில் ஈடுபடுவது குறித்து பிலிப்பீன்சும் ஆஸ்திரேலியாவும் ஆலோசித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் பெய்ஜிங்கின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துவரும் வேளையில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
பிலிப்பீன்சின் தற்காப்பு அமைச்சர் கார்லிட்டோ கால்வெஸ் ஜூனியருடன் இது குறித்து தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.
திரு மார்ல்ஸ், பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு நேற்று அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது பேச்சுவார்த்தை நடத்தினார்.
"உலகளாவிய விதிமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளும் நாடுகள் என்ற வகையில் இந்த விவகாரத்தின் தொடர்பில் நாங்கள் இணைந்து செயல்படுவதே முறை," என்று திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.
"அந்த வகையில் கூட்டு சுற்றுக்காவலில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க நாங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இம்முயற்சியை நாங்கள் தொடர்வோம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம்," என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தென்சீனக் கடலில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட சீனா தென்கிழக்காசிய நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் சின் காங் கூறியுள்ளார். இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவர் அவ்வாறு சொன்னார்.
தென்சீனக் கடல் விவகாரம்: பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சி

