கோலாலம்பூர்: கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு இருக்கும் விலை உச்சவரம்பை வரும் ஜூன் மாதம் முதல் நீக்க மலேசியா திட்டமிட்டு வருகிறது. அவற்றுக்கான தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மலேசியாவில் கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதை எதிர்கொள்ள உள்ளூரில் சோளம் வளர்க்கும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
விலை உச்சவரம்பு நீக்கப்பட்டால் அது சில்லறை வர்த்தக விலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தமது அமைச்சு கண்காணிக்கும் என்று மலேசியாவின் வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது சாபு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். இவ்வாண்டு மே மாதம் முதல் அந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தற்போது சாதாரண கோழி இறைச்சிக்கான விலை ஒரு கிலோகிராமுக்கு 9.40 ரிங்கிட்டைத் (2.80 வெள்ளி) தாண்டக்கூடாது. அதே வேளையில் ஓர் 'ஏ' தர கோழி முட்டையின் விலை அதிகபட்சமாக 45 மலேசிய காசாக இருக்கவேண்டும்.
விதிமுறைகளை மீறி தங்களின் பண்ணை விலங்குகளையும் முட்டைகளையும் அதிக விலைக்கு விற்கவேண்டிய சூழலுக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக சில பண்ணை உரிமையாளர்களும் சில்லறை வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். லாபத்தை அதிகரிக்க சில பண்ணை உரிமையாளர்கள் அதிகம் ஏற்றுமதி செய்யவும் விரும்புகின்றனர். இதனால் உள்ளூரில் விநியோகம் குறைகிறது.

