நியூயார்க்: உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் உக்ரேனைவிட்டு ரஷ்யாவை வெளியேற வைக்க வகைசெய்யக்கூடிய வாக்கெடுப்பு நடந்துள்ளது.
வாக்கெடுப்பை நேற்று நடத்த ஐக்கிய நாட்டு நிறுவனம் திட்டமிட்டது. தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்குமாறு உக்ரேனும் ரஷ்யாவும் 193 ஐக்கிய நாட்டு உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தன.
உக்ரேனின் இறையாண்மையைக் காக்குமாறு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உறுப்பு நாடுகளை வேண்டினார். இந்த வாக்கெடுப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியது.
"உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதன் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்," என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐக்கிய நாட்டு பொதுச் சபையிடம் கூறினார்.
அனைத்து உறுப்பு நாடுகளும் வலுக்கட்டாயமாக எல்லைப் பகுதிகளை ஊடுருவுவதையோ ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பறிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரெஸ் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான ஐக்கிய நாட்டு உறுப்பு நாடுகள் உக்ரேனுக்குச் சாதகமாக வாக்களித்தன. இம்முறை தனக்குச் சாதகமான வாக்குகள் மேலும் அதிகரிக்கும் என்று உக்ரேன் நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரச்சினைக்குச் செல்லாத ஒரு நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்ததால்தான் போர் மூண்டதாக உக்ரேன் கூறி வருகிறது. அதேவேளையில், இது மறைமுகமாக தனக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான போர் என்று ரஷ்யா சொல்கிறது.
போரில் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கி மேற்கத்திய நாடுகள் உதவி வந்துள்ளன. மேலும், ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்த பிறகு மேற்கத்திய நாடுகள் மாஸ்கோமீது பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி உதவக்கூடும் என்று உளவுத்துறை தகவல் ஏதேனும் கிடைத்திருந்தால் அது வெறும் வதந்தி என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று கூறினார்.
இது குறித்த உளவுத் துறை தகவலை அமெரிக்க அரசாங்கம் வெளியிடக்கூடும் என்று வோல் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் முன்னதாகத் தெரிவித்ததையொட்டி சீனா இவ்வாறு கூறியது.
இன்றுடன் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு ஆகிறது

