பெய்ஜிங்: சீனாவில் நேற்று முன்தினம் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஆகக் கடைசி நிலவரப்படி குறைந்தது ஐவர் மாண்டுவிட்டனர். 48 பேரைக் காணவில்லை. சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் இத்தகவலைத் தெரிவித்தது.
இச்சம்பவம் சீனாவின் உள் மங்கோலியா வட்டாரத்தில் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் பின்னிரவில் நேர்ந்த மோசமான நிலச்சரிவால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. எனினும், அதற்குப் பிறகு நேற்று மீட்புப் பணிகள் தொடர்ந்ததாக சிசிடிவி ஊடகம் குறிப்பிட்டது.
'சின்ஜியாங் கோல் மைனிங்' நிலக்கரி சுரங்க நிறுவனம் நடத்தும் அல்சா லீக் பகுதியில் உள்ள இந்தச் சுரங்கம் இடிந்ததைத் தொடர்ந்து 50 மீட்டர் அகலம், 80 மீட்டர் உயரம் பரப்பளவில் இடிபாடுகள் காணப்பட்டது.
"பிற்பகல் 1.15 மணிக்கு நான் வேலையைத் தொடங்கினேன். அப்போது மலையிலிருந்து கற்கள் விழுவதைக் கண்டேன்," என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஊழியர் ஒருவர் சிசிடிவி ஊடகத்திடம் கூறினார்.
"நிலைமை தொடர்ந்து மோசமடைவதை அறிந்தேன். அனைவரையும் வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்குள் மலை இடிந்து விழுந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார். 300 தீயணைப்புப் படையினர், 60 தீயணைப்பு வாகனங்கள், ஆறு மோப்ப நாய்கள் சம்பவ இடத்தில் நேற்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகக் கடைசி நிலவரப்படி காயமுற்ற ஆறு பேர் மீட்கப்பட்டதாக சீனாவின் சுகாதார அமைச்சு கூறியது.

