சிட்டிக்கு வருத்தம் தந்த லைப்சிக்
லைப்சிக்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியை வெல்லவிடாமல் செய்து வருத்தத்துக்கு உள்ளாக்கியது ஜெர்மனியின் ஆர்பி லைப்சிக். ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முற்பாதியாட்டம் முடியும்போது ரியாட் மாஹ்ரெஸின் கோல் வாயிலாக சிட்டி முன்னணியில் இருந்தது. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் லைப்சிக்கின் குரோவேஷிய வீரர் ஜ்வோஸ்கோ க்வார்டியோல் (படத்தில் நடுவில்) கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
அடுத்ததாக இரண்டாம் சுற்றில் இவ்விரு குழுக்களும் சிட்டியின் சொந்த மண்ணில் மோதும். இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு காலிறுதிக்குச் செல்லும் குழு நிர்ணயிக்கப்படும்.
பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பனாமா
ஹேமில்டன்: பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்க பனாமா தகுதிபெற்றுள்ளது. அதுவே இவ்வாண்டு நடைபெறவுள்ள அப்போட்டிக்கு முன்னேறியுள்ள கடைசி அணி. கடைசி 'பிளேஆஃப்' தகுதிச் சுற்று ஆட்டத்தில் பராகுவேயை வென்று பனாமா உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னேறியது.
வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது அது. முன்னதாக பனாமாவின் ஆண்கள் காற்பந்து அணி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்தது.
இவ்வாண்டின் பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி, வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 20ஆம் ேததிவரை நடைபெறும். நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இணைந்து போட்டியை ஏற்று நடத்துகின்றன. போட்டியின் முதல் சுற்றில் பிரான்ஸ், ஜமைக்கா, பிரேசில் ஆகிய அணிகளுடன் 'எஃப்' பிரிவில் பனாமா இடம்பெறும்.
இங்கிலாந்து காற்பந்துக்கு சுயேச்சை ஒழுங்குமுறை அமைப்பு
லண்டன்: இங்கிலாந்து காற்பந்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கான முயற்சி அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லிக் உட்பட இங்கிலாந்து காற்பந்துக் குழுக்களைக் கண்காணிக்க சுயேச்சை ஓழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்க வெள்ளை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காற்பந்து நிர்வாகம் தொடர்பில் ரசிகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் முந்தைய விளையாட்டு அமைச்சர் டிரேசி கிரவுச்சின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒழுங்குமுறை அமைப்பு சட்டபூர்வமாகச் செயல்படுத்தப்பட்டால் அது, தவறான போக்கைக் கொண்ட உரிமையாளர்கள் காற்பந்துக் குழுக்களை வாங்குவதைத் தவிர்ப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடும்.

