மணிலா: பிலிப்பீன்சில் அண்மையில் விமானம் ஒன்று காணாமற்போயிருந்தது. அந்த விமானம் விழுந்து நொறுங்கியதையும் அதில் இருந்த நால்வரும் மாண்டுவிட்டதையும் அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர்.
விபத்து நிகழ்ந்தபோது அந்த 'செஸ்னா 340' ரக விமானத்தில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் உட்பட நால்வர் இருந்தனர். அல்பாய் மாநிலத்திலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரம் கழித்து காணாமற்போனது.
எந்நேரமும் குமுறக்கூடிய மேயோன் எரிமலை மேல் தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மேற்குப் பகுதியில் சிதைவுகள் கண்டறியப்பட்டன.
விமானம் விழுந்த பகுதியை மீட்புப் பணியாளர்கள் நேற்று முன்தினம் சென்றடைந்ததாகவும் அதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் விபத்து நிகழ்ந்த பகுதி இருக்கும் காமாலிக் வட்டாரத்தின் மேயர் தெரிவித்தார்.