சிட்னி: ஆஸ்திரேலியாவில் மூன்றாண்டுகளாக தேவைக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளது. அதனால் அந்நாட்டில் பயிர்கள் வளர்வதற்கு நிலைமை பெரிதும் சாதகமாக அமைந்தது.
எனினும், இனி காட்டுத் தீ மூள்வதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பருவநிலைக் குழு, 'எல்கா' எனும் பருவநிலை நடவடிக்கைக்கான அவசரநிலை தலைவர்கள் குழு இரண்டும் இணைந்து அறிக்கையை வெளியிட்டன.
2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவு மழை பொழிந்துள்ளது. லா நினா பருவநிலை நிகழ்வால் கடுமையான மழைக்காலம் வழக்கத்துக்கு மாறாக மூவாண்டுகளுக்கு நீடித்தது.
இப்போது மழைக்காலம் ஓய்ந்துவிட்டதாகவும் அதிகரிக்கும் வெப்பநிலையால் புல்வெளிகளும் வனப் பகுதிகளும் காய்ந்துபோவதாகவும் நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

