எதிர்வரும் கோடைகால விடுமுறைப் பயணங்களையும் விமான நிலையங்களில் ஏற்படும் திடீர் கூட்ட நெரிசல்களையும் சமாளிக்க இப்போதே திட்டம் தீட்டத் தொடங்கிவிட்டன சில முன்னணி அனைத்துலக விமான நிலையங்கள்.
உச்ச நேரத்தில் கூட்டத்தைச் சமாளிக்கவும் பயணிகளின் பயண உடைமைகள் வேகமாகக் கிடைக்கவும் விமான நிலையங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு பல நாடுகளில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பயண நடவடிக்கைகள் வழக்கத்திற்கு திரும்பின.
ஆனால், அப்போது விமான நிலையங்களில் எதிர்பாராத அளவு பயணிகள் கூட்டம் அலைமோதியதால் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் விமான நிலையங்களில் நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டன.
அதனால், இப்போது கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் விமானங்களின் வருகை, புறப்பாடு தொடர்பில் தெளிவான கால அட்டவணையை வகுத்து வருகின்றன.
அத்துடன், பயணிகள் எந்த நேரத்தில் விமான நிலையங்களுக்கு வர வேண்டும் என்பது போன்ற தகவல்களைப் பயணிகளுக்கு முன்கூட்டியே அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பயணப்பைகள் பயணிகளுக்கு வேகமாகக் கிடைக்க போதுமான அளவில் ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கவும் ஊழியர்களிடம் தெளிவான ஒப்பந்தங்களைப் போட்டு வருகின்றன விமானநிலையங்கள்.

