ஹாங்காங்: ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முன்னணி நிதி மையமாக மீண்டும் உருவெடுக்கும் ஹாங்காங்கின் முயற்சியில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்நகரில் போதுமான விமானத் துறை ஊழியர்கள் இல்லாதது இதற்குக் காரணம். விமானத் துறை ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஹாங்காங்கின் அனைத்துலகத் தொடர்புகளை மீண்டும் உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் ஹாங்காங்கின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. அதனால் எழுந்த பின்விளைவுகளைச் சரிசெய்வது சவாலாக இருந்து வருகிறது.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் பதிவான ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 68 விழுக்காட்டினர் மட்டுமே சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பணியில் இருந்தனர். ஹாங்காங்கின் விமான நிலைய ஆணையம் இதைத் தெரிவித்தது.
பல விமான நிறுவனங்கள் உள்ளூரில் ஊழியர்களை நியமிக்க சிரமப்படுகின்றன. அதனால் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பிருந்த சில விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
உதாரணமாக, ஹாங்காங்கிற்கும் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கும் இடையே இயங்கிய தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதை குவாண்டாஸ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் இருக்கும் ஊழியர் தட்டுப்பாடு அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. போதுமான விமானிகள் இல்லாதது மட்டுமின்றி விமானப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரிடையேயும் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு முன்புவரை உலகளவில் மூன்றாவது ஆக அதிகமான பயணிகளை வரவேற்கும் விமான நிலையமாக ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் திகழ்ந்தது. சென்ற மாத நிலவரப்படி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில் 32 விழுக்காட்டுப் பயணிகள் மட்டுமே ஹாங்காங் வந்து சென்றனர் என்று அந்நகரின் விமானப் போக்குவரத்துத் துறையின் பிரிவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் போதுமான விமானத் துறை ஊழியர்கள் இல்லாத நிலை

