காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

2 mins read
0ff8bf77-5945-45c8-aa2e-cee118c95fa6
-

சரிவிலிருந்து மீண்டெழ சிரமப்படும் லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் லிவர்பூல் மீண்டும் சரிவை எதிர்கொள்கிறது. நேற்று பின்னிரவில் நடைபெற்ற லிவர்பூலும் கிறிஸ்டல் பேலசும் மோதிய லீக் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

சில வாரங்கள் முன்புவரை தொடர்ந்து ஆட்டங்களில் வெல்லத் தவறிய லிவர்பூல் அண்மையில் மீண்டெழத் தொடங்கியது. குழுவில் தன்னம்பிக்கை கூடும் உணர்வு தலைதூக்கியது.

எனினும், சென்ற வாரம் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் ரியால் மட்ரிடிடம் இக்குழு படுதோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து லிவர்பூல் மீண்டும் சிரமத்தை எதிர்நோக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.

சென்ற பருவத்தில் லீக் கிண்ணத்தை வெல்லும் விளிம்பிற்கு வந்து பட்டியலில் இரண்டாம் இடத்தில் முடித்த லிவர்பூல் தற்போது ஏழாம் இடத்தில் உள்ளது.

பழைய வேகத்துடன் வென்ற சிட்டி

போர்ன்மத்: அண்மையில் சற்று களையிழந்து காணப்பட்ட இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி மீண்டும் பழைய வேகத்துடன் இயங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் போர்ன்மத்தை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி.

முற்பாதியாட்டம் நிறைவடையும்போதே சிட்டி 3-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. ஹூலியன் அல்வாரெஸ், எர்லிங் ஹாலண்ட், ஃபில் ஃபோடன் ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் போர்ன்மத்தின் கிரிஸ் மெப்பம் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் சிட்டிக்கு நான்காவது கோலும் விழுந்தது. 83வது நிமிடத்தில் ஜெஃபர்சன் லர்மா போர்ன்மத்துக்கு ஆறுதல் கோலைப் போட்டார்.

லீக் பட்டியலில் சிட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது. சிட்டியைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள ஆர்சனல் முதலிடம் வகிக்கிறது.

சிட்டியைவிட ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியிருக்கிறது ஆர்சனல்.