கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் கூடிய விரைவில் அங்கிருக்கும் தானியக்க குடிநுழைவு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரர்களுக்கும் பொருந்தும்.
'குறைந்த அபாயம் உள்ள நாடுகள்' இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சயீஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய அணுகுமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமானத்தில் உள்ள குடிநுழைவு முனையங்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
அண்மைய காலமாக அந்த விமான நிலையத்தின் குடி
நுழைவு முனையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரத்துக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன, புகார்கள் குவிந்துள்ளன.
"இதற்கு முன்பு தானியக்க குடிநுழைவு இயந்திரங்களை மலேசியர்கள் மட்டுமே பயன்
படுத்தலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்த வெளிநாட்டவர்களுக்குக் கூடிய விரையில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, சிங்கப்பூர், புருணை, நியூசிலாந்து போன்ற குறைந்த அபாயம் உள்ள நாடுகள் அல்லது ஜி-7 நாடு
களிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படும்.
"இந்த அணுகுமுறை மூலம் குடிநுழைவு முனையங்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலைக் குறைக்க இலக்கு கொண்டுள்ளோம். குறிப்பாக, பயணிகள் அதிகமானோர் மலேசியாவுக்கு வரும் காலகட்டங்களில் பயணிகள் நெரிசலைக் குறைக்க விரும்புகிறோம்," என்று திரு சயீஃபுதீன் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நீண்டகால குடி
நுழைவு அனுமதி உள்ளவர்கள் தானியக்க குடிநுழைவு முனையங்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளில் உள்ள மின் நுழைவாயில்களை சிங்கப்பூரர்களும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மின் நுழைவாயில்களைப் பயன்படுத்த விரும்பும் சிங்கப்பூரர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் செல்லுப்படியான மின் கடப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும்.