ஹாங்காங்: உலகிலேயே ஹாங்காங்கில்தான் மிக நீண்டகாலமாக முகக்கவசத்தை கட்டாயமாக அணியும் விதிமுறை அமலில் இருந்தது.
இப்போது அந்த விதிமுறை அகற்றப்படுகிறது. இன்று மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கட்டாய முகக்கவச விதிமுறை கைவிடப் படுகிறது என்று அதன் தலைமை நிர்வாகியான ஜான் லீ நேற்று அறிவித்தார்.
ஹாங்காங்குக்கு சுற்றுப் பயணிகளை ஈர்க்கவும் வழக்க நிலைக்குத் திரும்பவும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த முகக்கவச விதிமுறை கைவிடப்படுவதாக அவர் கூறினார்.
"இந்த முடிவுக்கு இதுதான் நல்ல தருணம். ஹாங்காங் வழக்க நிலைக்குத் திரும்புவதை இது தெளிவாகக் காட்டும்," என்று திரு லீ சொன்னார்.
நோய் தொற்றக்கூடிய அபாய கரமான இடங்களான மருத்துவமனை போன்ற இடங்களில் ஊழியர்கள், வருகையாளர்கள் முகக்கவசம் அணிவது பற்றி அவ்விடங்களின் நிர்வாகமே முடிவு செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்காவ்விலும் முகக்கவச விதிமுறை கைவிடப்படுகிறது. பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் உட்பட குறிப்பிட்ட இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று மக்காவ் நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியது.
ஹாங்காங், அண்மையில் சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்காக மாபெரும் பிரசாரத்தைத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இலவச விமானச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முகக்கவச விதிமுறையும் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
ஹாங்காங்கில் இரண்டு வயது குழந்தைகள் உட்பட பள்ளி களில் முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதனால் கற்றல் மற்றும் குழந்தை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் கவலைப்பட்டனர்.
இந்த நிலையிலும் கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்கான விரைவு ஆன்டிஜென் பரிசோதனையை மாணவர்கள் தினமும் செய்ய வேண்டும்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து புதன்கிழமை முதல் விலக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர்.
தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாய கொவிட்-19 பரிசோதனை செய்வது குறைந்தபட்சம் மார்ச் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

