சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி ரயில் நிலையத்தில் 28 வயது துப்புரவாளர் ஒருவரை இந்திய நாட்டவர் ஒருவர் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது. அந்த இந்தியரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
முகம்மது ரஹ்மத்துலா சையது அகம்மது, 32, என்ற அந்த இந்தியர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார் என்றும் சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்தச் சம்பவம் மிகவும் கவலை தருவதாகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் தூதரகம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை, காவல்துறை ஆகியவற்றிடம் கொண்டு சென்று இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியது.
சிட்னியில் உள்ள ஆபோர்ன் ரயில் நிலையத்தில் துப்புரவாளரை அகம்மது தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த இரண்டு காவலர்களை அவர் மிரட்டியதாகவும் பிறகு அந்தக் காவலர்களைத் தாக்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு காவல் அதிகாரி மூன்று முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் அகம்மதுவின் நெஞ்சில் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

