தைப்பே: ஜனநாயக நாடான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று வலியுறுத்தும் சீனா, அந்நாட்டுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறது.
தைவானின் வான்வெளியில் போர் விமானங்களை ஊடுருவச் செய்து சீனா மிரட்டி வருகிறது. தைவானின் எல்லையோரமாக போர்க்கப்பல்களைக் காட்டி அது அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் தைவானுக்கு 619 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள (S$832 மி. ) ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதில் எஃப் 16 போர் விமானங்களில் பொருத்தக்கூடிய ஏவுகணைகளும் அடங்கும்.
தைவானுக்கு அருகே தொடர்ந்து இரண்டாவது நாளாக சீனா பெரிய அளவில் ஊடுருவலில் ஈடுபட்டுள்ள வேளையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே பெய்ஜிங்குடனான அமெரிக்க உறவு பட்டும் படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை இருதரப்பு உறவை மேலும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகாயத்திலிருந்து ஆகாயம் பாயும் இருநூறு ஏவுகணைகள், நூறு 'ஏஜிஎம்-88பி' ரக ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களையும் சாதனங்களையும் தைவானுக்கு விற்க தற்காப்பு அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று பென்டகன் திங்கட்கிழமை அன்று தெரிவித்தது.
"இந்த உத்தேச விற்பனையால் தைவானுக்கு அதன் ஆகாயவெளியையும் வட்டாரத்தையும் தற்காக்கும் ஆற்றல் அதிகரிக்கும்," என்று அறிக்கையில் அமெரிக்க தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே கம்யூனிச ராணுவத்தின் ஆத்திரமூட்டும் செயல்களையும் மிரட்டல்களையும் வலுவாகச் சமாளிக்க ஏவு கணைகள் பெரிதும் உதவும் என்று தைவானிய தற்காப்பு அமைச்சு கூறியது.
ரேதியன் டெக்னாலஜிஸ், லாக்ஹிட் மார்ட்டின் ஆகிய இரண்டும் இதில் முக்கிய ஒப்பந்த நிறுவனங்களாக உள்ளன.
தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் இந்த இரு நிறுவனங் களுக்கும் சீனா தடை விதித்து உள்ளது.
சென்ற வியாழக்கிழமை தனது நாட்டின் ஆகாயவெளியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 சீன விமானங்கள் ஊடுருவியதாக தைவான் தெரிவித் திருந்தது.

