பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்வதால் காய்கறி பற்றாக்குறை ஏற்படலாம் என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கனமழை, பலத்த காற்றால் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவீ, தென்தீபகற்பத்தில் திடீரென பெய்துள்ள கனமழையால் ஒரு மில்லியன் கிலோ காய்கறி பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மில்லியன் ரிங்கிட் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜோகூரில் ஒரே இரவில் வெள்ளம் பெருகி பண்ணைகள் மூழ்கிவிட்டன. ஆற்றங்கரையில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் சாதனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இயந்திரங்கள் நீரில் மூழ்கிவிட்டன என்று அம்மாநில விவசாயிகள் கூறியதாகஅவர் தெரிவித்தார்.
சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் வாகனங்கள் பண்ணைகளுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விற்பனைச் சந்தையில் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் பூச்சி மருந்துகளையும் உரங்களையும் வாங்க முடியாமல் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது," என்று புதன் கிழமை திரு லிம் குறிப்பிட்டார்.
ஜோகூரில் உள்ள பத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. சுமார் 7,000 குடும்பங்களைச் சேர்ந்த 26,000க்கும் மேற்பட்டோர் 193 தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கேமரன் ஹைலண்ட் காய்கறி உற்பத்தி யாளர் சங்கத்தின் செயலாளர் சாயே இ மோங், தொடர்ந்து இதே போன்று மழை நீடித்தால் காய்கறி விலை அதிகரிக்கும் என்று எச்சரித்தார்.
காய்கறி விலையும் தேவைக்கு ஏற்ப ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இறுதியில் விவசாயிகளுக்குத்தான் நட்டம் ஏற்படுகிறது. இதற்கு முன்னர் 2022 பிற்பகுதியிலும் 2023 முற் பகுதியிலும் அடிக்கடி மழை பெய்ததால் காய்கறி விலைகள் அதிகரித்ததாக திரு சாயே தெரிவித்தார்.

