ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடக்கு ஜகார்த்தா பகுதியில் அரசு எரிசக்தி நிறுவனமான பெர்டமினா மூலம் இயக்கப்படும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தின்போது, தீயின் வேகம் அதிகரித்ததால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கனமழையால் எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த இந்தோனீசிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிக்கி வித்யாவதி, "இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

