ஷா ஆலாம்: கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று தொழில்நுட்பர்களை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த சம்பவத்தில் 300,000 ரிங்கிட்டுடன் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்துப் பேசிய சிலாங்கூர் காவல்துறை தலைவர் ஹுசேன் உமர் கான், சிலாங் கூரில் மேரு, குவாங்கில் நடத்தப் பட்ட பல சோதனைகளுக்குப் பிறகு மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
விசாரணையில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையையும் கடந்த ஆண்டு பிப்ரவரி, டிசம்பரில் நடந்த சில சம்பவங்களையும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
"கும்பலுக்கு குவாங்கைச் சேர்ந்த 43 வயது நபர் மூளையாகச் செயல்பட்டுள்ளான். மேம் படுத்தப்படாத, குறிப்பிட்ட வங்கி களின் ஏடிஎம் இயந்திரங்களை சந்தேக நபர்கள் குறி வைத்தனர். இயந்திரத்துக்குள் புகையை செலுத்தி, தீயிட்டு உடைத்தனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிப்ரவரி 23ஆம் தேதி விடியற்காலை நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை மூவரும் கொள்ளையடித்துள்ளனர்.
அந்த ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம், மை தெளிக்கும் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றால் பணத்தின் மீது மை தானாக தெளிக்கப்படும்.
சந்தேக நபர்கள் பணத்தை கடற்கரையில் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது பிடிபட்டதாக ஆணையர் ஹுசேன் தெரிவித்துள்ளார்.