இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை கைது செய்ய நேற்று காவல்துறையினர் கைது ஆணையுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.
ஆனால் வீட்டைச் சுற்றி ஆதரவாளர்கள் குவிந்திருந்ததால் அவரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்று இந்தியா டுடே இணையத் தளம் தெரிவித்தது.
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலகிய இம்ரான் கான் மீது மற்ற நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் கொடுத்த பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை தேர்தலின்போது தனது சொந்த கணக் கிலிருந்து மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனால் எளிதில் பிணையில் வெளிவர முடியாத கைதாணை அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை யினர் அவரது வீட்டுக்குச்சென்றனர்.
ஆனால் லாகூரில் உள்ள வீட்டில் இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா என்பதை காவல்துறையும் நேற்று மாலை வரை உறுதிப்படுத்தவில்லை.

