கோத்தா திங்கி: ஜோகூரில் டாக்சி ஓட்டுநரிடம் இரண்டு பயணிகள் கத்தி முனையில் கொள்ளையடித்து உள்ளனர்.
சனிக்கிழமை 3.50 மணியளவில் டாக்சியில் ஏறிய முப்பது வயதுகளில் இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கலாங் பாத்தாவிலிருந்து பெங்கராங் சென்றதாக சம்பவத்தை விவரித்த கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஸமோரோ தெரிவித்தார்.
"தாய் சான் கோங் கோயில் அருகே உள்ள இடத்தை அடைந்ததும் மடக்கும் கத்தியை எடுத்து ஓட்டுநரின் இடுப்பில் வைத்து மிரட்டினர். கையிலிருக்கும் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஓட்டுநரிடம் அவர்கள் கூறினர்.
இதனால் எழுபது வயது ஓட்டுநர் தன்னிடமிருந்த கைபேசி, கைக்கடிகாரம், 400 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றைக் கொடுத்தார்.
இவற்றை வாங்கிக்கொண்டு சந்தேக நபர்கள் புதருக்குள் ஓடிவிட்டனர்." என்று திரு ஹுசைன் தெரிவித்தார்.
ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் வேகமாகச் செயல்பட்ட கோத்தா திங்கி தலைமையகக் காவல்துறையினர் நான்கு மணி நேரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகே இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் தனது இடதுபக்க மார்பிலும் வலது கையிலும் சிலந்தி, பூரான் வடிவத்தில் பச்சை குத்தியிருந்ததால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடிந்தது என கோத்தா திங்கி காவல்துறையினர் தெரிவித்தனர்.