'உணர்ச்சிபூர்வமான தருணம்'
லண்டன்: நேற்று நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டியில் இரண்டு கோல்கள் விட்டு பின்னுக்குச் சென்ற ஆர்சனல் பின்னர் மீண்டு வந்து 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் போர்ன்மத் குழுவை வீழ்த்தியது.
ஆர்சனலின் மூன்றாவது கோலை கூடுதல் நேரத்தின் ஏழாவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரரான நெல்சன் என்பவர் போட்டதும் ஆர்சனல் நிர்வாகக் குழுவினர், ரசிகர்கள், வீரர்கள் அனைவரும் தலைகால் புரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
"அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போனோம். நாங்கள் அனைவரும் அநேகமாக ஒன்றாக அனுபவித்த மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம் அது", என ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டா கூறினார்.
முன்னதாக, ஆர்சனலின் முதல் இரண்டு கோல்களை தாமஸ் பார்டி என்பவரும் பென் ஒயிட் என்பவரும் போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர்.
கட்டுக்கோப்பான ஆட்டம்;
வீழ்ந்த நியூகாசல்
லண்டன்: நேற்று முன்தினம் இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி தனது கட்டுக்கோப்பான ஆட்டத்தின் மூலம் நியூகாசல் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி குழு மூன்று புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஆர்சனலுக்கு அருகிலிருக்கும் தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு ஃபில் ஃபோடனும் பெர்னார்டோ சில்வாவும் கோல் போட்டனர்.
மான்செஸ்டர் சிட்டி குழு இந்த ஆட்டத்தில் வென்ற போதிலும் நியூகாசல் குழு கோல் போடும் வாய்ப்புகள் பலவற்றை வீணடித்ததால் சிட்டிக்கு இந்த வெற்றி கிடைத்ததாகக் காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

