தோக்கியோ: ஜப்பான்வசம் இருக்கும் செங்காக்கு தீவுகளுக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாகவும் அறுவரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் கரையோரக் காவல்படை தெரிவித்துள்ளது. செங்காக்கு தீவுகளுக்கு சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி படகு குறிப்பாக எந்த இடத்தில் மூழ்கியது என்பது தெரியவில்லை. நேற்று முன்தினம் செங்காக்கு தீவுகளின் வடக்குப் பகுதிக்கு அருகே படகு மிதந்துகொண்டிருந்ததை ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் கண்டனர்.
படகில் ஒரு தைவானியரும் ஆறு இந்தோனீசியர்களும் இருந்ததாக கரையோரக் காவல்படையின் பேச்சாளர் ஒருவர் ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். படகில் மாண்ட ஒருவரின் உடல் இருந்ததாக வேறொரு பேச்சாளர் குறிப்பிட்டார். மாண்டவரின் உடலில் இருந்த அடையாள அட்டையை வைத்துப் பார்க்கும்போது அவர் ஓர் இந்தோனீசியராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பிற்பகலில் படகு கவிழ்ந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. அதிலிருந்து சற்றுக்காவல் பணியில் ஈடுபடும் கப்பல்களையும் ஹெலிகாப்டர்களையும் கொண்டு தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கவிழ்ந்த படகு தைவாளைச் சேர்ந்தது என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன. எனினும், அது பற்றிய தகவல் அதிகம் இல்லை என்று கரையோரக் காவல்படை குறிப்பிட்டது. அது மீன்பிடிப் படகாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

