கியவ்: உக்ரேனின் பக்முட் நகரின் கிழக்குப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யாவின் ஆயுதமேந்திய வேக்னர் தனியார் படைகள் கூறியுள்ள நிலையில், வரும் நாள்களில் அந்நகரம் வீழக்கூடும் என்று நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் எச்சரித்துள்ளார். அண்மைய வாரங்களில் பக்முட்டைக் கைப்பற்ற ரஷ்யா பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முட்டை ரஷ்யா கைப்பற்றினால், கடந்த அரைஆண்டில் அது பெறும் முதல் வெற்றியாக இது இருக்கும்.
பக்முட் வீழ்ந்தால் உக்ரேனின் கிழக்கில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்று வதற்கு அது வழிவகுக்கும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.
இவ்வேளையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை அனுப்பிய நார்ட் ஸ்ட்ரீம் எண்ணெய்க்குழாயை உக்ரேனிய ஆதரவுக் குழுக்கள் சேதப்படுத்தியதாக நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தியை உக்ரேன் மறுத்தது. அது பற்றிய புதிய உளவுத் தகவல் களை அமெரிக்கா பெற்றதாக டைம்ஸ் கூறியிருந்தது.

