வாஷிங்டன்: ஆஸ்திரேலியா, 2030களில் அமெரிக்காவிடமிருந்து அணுசக்தி ஆற்றல்கொண்ட ஐந்து வர்ஜினியா ரக கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030களின் தொடக்கத்தில் முதலில் மூன்று வர்ஜினியா கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்கும்.
அதற்குப் பிறகு இக்கப்பல்களில் மேலும் இரண்டை வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தற்காப்பு ஒப்பந்தத்தின்கீழ் இந்தப் பரிவர்த்தனை இடம்பெறுவதாக நான்கு அமெரிக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் குறிப்பிட்டனர். 'ஆக்கஸ் பேக்ட்' எனப்படும் இந்த ஒப்பந்தம், சீனாவுக்குப் புதிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின்கீழ் வரும் ஆண்டுகளில் ஓர் அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பலாவது ஆஸ்திரேலிய துறைமுகங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும். 2030களின் இறுதிவரை இந்தப் போக்கு தொடரும் என்று ஓர் அதிகாரி கூறினார்.
அணுசக்தி ஆற்றல்கொண்ட கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயதங்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியத் தலைவர்களுடன் சான் டியேகோ நகரில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

