பேங்காக்: தாய்லாந்தைப் பெரிதும் பாதித்துள்ள காற்றுத் தூய்மைக்கேட்டால் இவ்வாண்டு இதுவரை மட்டும் 1.32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் நோய்த் தடுப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டது.
இவ்வாண்டின் முதல் ஐந்து நாள்களில் மட்டும் சுமார் 1.325 மில்லியன் பேர் காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பான நோய்களுக்கு ஆளானதாக நோய்த் தடுப்பு அமைப்பின் தலைமை இயக்குநரான டாக்டர் ஒப்பாஸ் கார்ன்காவ்வின்பொங் கூறினார். நன், சயாங் மாய், சியாங் ராய், பிரே, பாயாவ், லம்புன், லாம்பாங், மே ஹோங் சொன், உட்டாராடிட், சுக்கோதாய், டாக், பிட்சானுக், பெட்சாபுன், நொன்தாபுரி, பேங்காக் ஆகியவை காற்றுத் தூய்மைக்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள்.
பேங்காக்கின் அனைத்து 50 வட்டாரங்களும் இப்பிரச்சினையை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 36 மாநிலங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு அபாயக் கட்டத்தை எட்டியிருக்கிறது. எனினும், இதர பகுதிகளைப் போல் அவை அதிக காலம் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று டாக்டர் ஒப்பாஸ் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை பேங்காக்கிலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களிலும் நிலைமை மேம்படும் என்று தாய்லாந்தின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது. இருந்தாலும், வட தாய்லாந்தின் சில பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை காலத்தில் காற்றுத் தூய்மைக்கேடு பிரச்சினை படிப்படியாக சீராகும்; ஆனால் இன்னும் சுமார் இரண்டு வாரங்களுக்கு அதிக மாற்றம் இருக்காது என்று டாக்டர் ஒப்பாஸ் சொன்னார்.