பெய்ஜிங்: திரு ஸி ஜின்பிங் மூன்றாவது தவணைக்காலத்திற்கு சீனாவின் அதிபராகவும் அந்நாட்டின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகிப்பதற்குச் சாதகமாக நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. அதைத் தொடர்ந்து திரு ஸி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார்.
சீனாவின் வரலாற்றில் இதுவரை யாரும் இரண்டு தவணைக்காலத்திற்கு மேல் அதிபராக இருந்ததில்லை.
ஒருவர் அதிபர் பதவியில் அதிகபட்சமாக இரண்டு தவணைக்காலம்தான் நீடிக்கலாம் என்ற அரசமைப்புச் சட்டம் 2018ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. அது, திரு ஸி மேலும் ஐந்தாண்டுகளுக்குப் பதவி வகிக்க வழிவகுத்துள்ளது.
துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஹான் ஷெங், துணை அதிபராகப் பொறுப்பேற்பதையும் நாடாளுமன்றம் அங்கீகரித்தது. முன்னதாக திரு வாங் சிஷான் துணை அதிபராக இருந்தார்.
அதிபர் பொறுப்பிற்கான போட்டியில் திரு ஸி ஜீன்பிங்கைத் தவிர வேறு யாரும் இல்லை. யாரும் அவருக்கு எதிராக வாக்களிவும் இல்லை, வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொள்ளவும் இல்லை.
நாடாளுமன்றத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு அனைவரும் தொடர்ந்து கைதட்டினர்.
தொடர்ந்து சீனாவின் அதிபராகப் பொறுப்பு வகிக்கவிருக்கும் திரு ஸிக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் கடிதம் வாயிலாகத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
திரு ஸியின் தலைமையில் சீனா பெரிய அளவில் மேம்பட்டிருப்பதாகத் தமது கடிதத்தில் குறிப்பிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அதன் மூலம் சீனாவின் மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த வட்டாரமும் பலனடைந்துள்ளதாகக் கூறினார்.

