பாலியில் மலை உச்சியிலிருந்து விழுந்த இந்தியர் மரணம்

1 mins read
45fa1cee-2747-49a8-a996-e51233790efb
-

பாலி: இந்தோனீசியாவின் பாலி தீவுக்கு அருகே உள்ள உள்ள நுசா பெனிடா எனும் சிறிய தீவில் இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அபிஷேக் பாத்தியா என்ற அந்த ஆடவர், நுசா பெனிடாவில் சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் புங்கா மெக்கார் எனும் பகுதியில் மாண்டார்.

படமெடுத்துக்கொண்டிருந்தபோது 40 மீட்டர் உயரம்கொண்ட மலையிலிருந்து விழுந்து அவர் இறந்தார்.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.20 மணியளவில் நிகழ்ந்ததாக பசார்னாஸ் எனும் இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு அமைப்பின் பாலி பிரிவுத் தலைவர் கடே தர்மதா தெரிவித்தார். திரு அபிஷேக்கின் உடல் நேற்றே மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரு அபிஷேக், சம்பவ இடத்தில் தனது நண்பருக்காகக் காத்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது அப்பகுதியின் காட்சிகளைப் படமெடுத்துக் கொண்டிருந்ததாகவும் மற்றோர் அதிகாரி கூறினார்.