தோக்கியோ: ஜப்பானின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான 87 வயது இவாவ் ஹக்காமாடாவின் (படம்) கொலை வழக்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற மறுவிசாரணைக்கு வருகிறது.
1968ஆம் ஆண்டில் தனது முதலாளி, அவரின் மனைவி, இரண்டு பதின்ம வயது பிள்ளைகள் ஆகியோரைக் கொன்றதை ஹக்காமாடா ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து இவருக்கு நீண்டகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதால்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஹக்காமாடா கூறிவந்தார்.
இவரின் கொலை வழக்கு மறுவிசாரணைக்கு வரவேண்டும் என்று 2014ஆம் ஆண்டில் வட்டார நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. எனினும், தோக்கியோ உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மறுத்தது. உயர்நீதிமன்றம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஜப்பானின் உச்சநீதிமன்றம் 2020ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றிக்கொண்டுள்ளது.
ஹக்காமாடா, உலகில் கொலைக் குற்றத்துக்காக ஆக அதிக காலம் சிறையில் இருந்தவர் எனக் கூறப்பட்டவர்.


