லண்டன்: முன்னாள் இங்கிலாந்து காற்பந்து வீரரும் தொலைக்காட்சிப் படைப்பாளருமான கேரி லினெக்கர் மீண்டும் பிபிசி ஒளிவழிக்குப் படைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பிரிட்டனின் பிரபல காற்பந்து நிகழ்ச்சியான 'மேட்ச் ஆஃப் தி டே'யின் படைப்பாளராக இருந்த லினெக்கர் சர்ச்சைக்குரிய அரசியல் ரீதியான கருத்துகளைத் தெரிவித்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதை எதிர்த்துப் பலர் குரல் கொடுத்தனர்.
லினெக்கர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல விளையாட்டு நிகழ்ச்சிப் படைப்பாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனால் கடந்த வாரயிறுதியில் இடம்பெறவிருந்த பல விளையாட்டு நிகழ்ச்சிகளை பிபிசி ரத்து செய்ய நேரிட்டது.
இப்பிரச்சினை மோசமடைந்ததைத் தொடர்ந்து உலகளவில் பிரபலமாக இருந்துவரும் பிபிசி ஊடகத்தின் நற்பெயருக்குப் பங்கம் வரக்கூடிய அபாயம் எழுந்தது.
இப்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் லினெக்கரைத் தான் மீண்டும் பணியில் அமர்த்தியிருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது. லினெக்கர், பிபிசியில் ஆக அதிக சம்பளம் பெறும் படைப்பாளர்.
1980களிலும் 90களின் ஆரம்பக் காலத்திலும் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரராகத் திகழ்ந்தவர் எவர்ட்டன், பார்சிலோனா உள்ளிட்ட குழுக்களுக்கு விளையாடியிருக்கும் லினெக்கர்.

