விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
d0af9015-9ccf-45c0-a034-b9fa58ab40fd
-

பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்றது இந்தியா

அகமதாபாத்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது ஆட்டம் சமநிலையில் முடிந்தது. எனினும், நான்கு ஆட்டங்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றுள்ளது இந்தியா (படம்).

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 571 ஓட்டங்களைக் குவித்தது.

இறுதி நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது.

கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றி; இறுதியாட்டத்தில் இந்தியா

கிரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் இலங்கையுடன் மோதிய டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் வரும் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்திற்கு இந்தியா தகுதிபெற்றது.

இலங்கை இறுதியாட்டத்திற்குத் தகுதிபெற இத்தொடரை 2-0 எனும் புள்ளிக் கணக்கில் வெல்லவேண்டியிருந்தது. இப்போது அதற்கான சாத்தியம் இல்லை. 1-0 எனும் புள்ளிக் கணக்கில் முன்னணியில் உள்ளது நியூசிலாந்து.

முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்கள் குவித்தது இலங்கை. பதிலுக்கு நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களை எடுத்தது. இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புத்துயிர் பெற்ற நியூகாசல்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் கடந்த சில வாரங்களாக அதிகம் சோபிக்காதிருந்த நியூகாசல் யுனைடெட் புத்துயிர் பெற்றுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன. வூல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது நியூகாசல்.

வூல்வ்ஸ், பெரிய குழுக்களுக்குப் பிரச்சினை தரக்கூடிய ஒரு குழு.

லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனல் ஃபுல்ஹமை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்ட ஆர்சனலிடம் இதுவரை உற்சாகம் குறையவில்லை.

மற்றோர் ஆட்டத்தில் லீக் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சவுத்ஹேம்ப்டனுடன் கோலின்றி சமநிலை கண்டது மான்செஸ்டர் யுனைடெட். எனினும், தப்பாட்டம் காரணமாக ஆட்டத்தின் 30வது நிமிடத்திலேயே யுனைடெட்டின் கசிமெரோ நீக்கப்பட்டார்.

இரு குழுக்களும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி விறுவிறுப்பாக ஆடின.