பெஷாவர்: பாகிஸ்தானில் மக்கள்
தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டோருக்கு பாதுகாப்பு அளித்து வந்த இரு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலைக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்று உள்ளதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் மக்கள்தொகை மின்னிலக்கக் கணக்கெடுப்பு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள 120,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள இரு மாவட்டங்களில் காவலர் கள் தாக்கப்பட்டதில் ஒருவர் மாண்டார். பின்னர் வேறொரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு காவலர் உயிரி ழந்தார்; மூவர் காயமுற்றனர்.
"திங்கட்கிழமை இரு வெவ்வேறு பாதைகளில் கணக்கெடுப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்த காவலர்களை துப்பாக்கிக்காரர்கள் தாக்கினர்," என்று டாங் மாவட்ட காவல்துறை அதிகாரி ஃபாரூக் கான் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த அதே திங்கட் கிழமை மாலை போராளிகளுக்கும் தனக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் போராளி ஒருவர் கொல்லப் பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.