கியவ்: உக்ரேன் படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் கொடுமைகள் ஓராண்டுக்கு முன்னர், படை எடுப்பு தொடங்கிய நேரத்தில் நிகழ்த்தப்பட்டதாக உக்ரேனிய அரசுத்தரப்பு ஆவணங்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.
அந்த ஆவணங்களைத் தாம் பார்வையிட்டதாகவும் அவை 2022 மார்ச் மாதம் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பானவை என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
கியவ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தோற்றுப் போனது. அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கியவ் நகரின் அருகே உள்ள பிரோவரி மாவட்டத்திற்குள் ரஷ்ய ராணுவத்தின் ஒரு படைப்பிரிவினர் நுழைந்தனர்.
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த இரு ராணுவ வீரர்கள் அதன் பின்னர் பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தக் கொடுமைகளை நேரில் கண்டவர்களின் பேட்டி ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் இருந்த ராணுவத்தினர், ஒரு வீட்டுக்குள் புகுந்து நான்கு வயது பெண் குழந்தையையும் அவரது தாயையும் வெளியே இழுத்து வந்தனர்.
அந்தப் பெண்ணின் கணவரை அடித்து உதைத்து, துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்த வீரர்கள், அவரின் கண்முன்னே அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று ஆவணங்கள் கூறின.

