ஹாங்காங்: ஓய்வுக்கால வயதை அதிகரிக்க சீனா திட்டமிடுகிறது. நாட்டின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருவதற்கு ஏற்ப ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனையில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளதாக குளோபல் டைம்ஸ் என்னும் அரசாங்க ஆதரவு செய்தித்தாள் நேற்று தெரிவித்தது. தனது செய்திக்கு ஆதரவாக சீனாவின் மனிதவள அமைச்சின் மூத்த நிபுணர் ஒருவரின் கருத்தை அச்செய்தித்தாள் மேற்கோள் காட்டியது.
ஜின் வெங்காங் எனப்படும் அந்த நிபுணர் சீனாவின் சமூகப் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழிலாளர் தொடர்பான கல்விக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
ஓய்வு வயதை படிப்படியாக உயர்த்த சீன அரசாங்கம் நீக்குப்போக்கான, வேறுபட்ட அணுகுமுறையைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
தொடக்கத்தில் ஓய்வு வயது சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அதன் பிறகு மக்கள்தொகை மூப்படைதலைக் கணக்கிட்டு சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் திரு ஜின் சொன்னார்.
எனவே, ஓய்வு வயது அதி
கரிப்பு என்பது மூப்படையும் விகிதத்தின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
"ஓய்வு வயதை மக்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது இந்தச் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம். சூழ்நிலை மற்றும் நிலவரத்திற்கு ஏற்ப அவர்கள் முடிவெடுக்கலாம்," என்றும் திரு ஜின் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஓய்வு வயது அதிகரிப்பு குறித்து சீனா அதிகாரபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. தற்போது ஆண்களுக்கான ஓய்வு வயது 60ஆகவும் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான ஓய்வு வயது 55 ஆகவும் உள்ளது. அதேநேரம் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் 50 வயதில் ஓய்வுபெற்றுவிட வேண்டும். இது உலகத்தின் ஆகக் குறைவான ஓய்வு வயதாகக் கருதப்படுகிறது.

