பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்கள் சளிக்காய்ச்ச லுக்கான கிருமித் தடுப்பு மருந்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். மின்வர்த்தகத் தளங்களில் அந்த மருந்தின் விற்பனை ஓராண்டுக்கு முன்பைவிட தற்போது 100 மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளது.
கொவிட்-19 தொற்று பாதிப்பு தணிந்துள்ள நிலையில் சீனாவில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒசெல்டமிவிர் எனும் பொதுப் பெயருள்ள அந்த மருந்தை மருத்துவர் எழுதித் தந்தால் வாங்க முடியும். சீனாவின் டாவ்பாவ், டிமால் இணைய வர்த்தகத் தளங்களில் மார்ச் மாதத்தின் முதல் 13 நாளில் 533,100 ஒசெல்டமிவிர் மாத்திரைகள் விற்கப்பட்டதாக லியன்டான்லூ எனும் பகுப்பாய்வு நிறுவனம் கூறியது.
அன்றாட விற்பனை ஓராண்டுக்கு முன்பைவிட 129 மடங்கு கூடியது.
கொவிட்-19 தொற்றின் பெரும்பாதிப்பு மக்களின் மனங்களைவிட்டு அகலாததால் அவர்கள் அச்சப்படும் வாய்ப்பு அதிகம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறினர்.
மேலும், கிருமித் தடுப்பு மருந்தின் இருப்பு குறைவாக உள்ளது. அதனால் அவற்றின் விலையும் கூடிஉள்ளது. அதனால் மருந்து நிறுவனங்களின் பங்கு விலைகள் மளமளவென்று ஏறியுள்ளன.
சீனாவில் கொவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தவுடன், மக்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதை அடுத்து காய்ச்சல் பரவல் அதிகரித்தது. மருத்துவ மனைகள் நிரம்பி வழிந்ததால் சிகிச்சைபெற மக்கள் அல்லாடினர்.

