வெற்றியாளர் கிண்ண காலிறுதிச் சுற்றில் மேன்சிட்டி, இண்டர் மிலான்
ஆர்பி லைப்ஸிக் அணியை 7-0 எனும் கோல் கணக்கில் வென்று மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு, வெற்றியாளர் கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் பாதியில் அடித்த மூன்று கோல்கள் உட்பட எர்லிங் ஹாலண்ட் ஐந்து கோல்கள் அடித்து மீண்டும் சாதனை புரிந்தார். மேன் சிட்டிக்காக ஒரு பருவத்தில் ஆக அதிகமான கோல்களை அடித்தவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அதன்வழி 94 ஆண்டுச் சாதனையை அவர் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணியில் சேர்ந்த ஹாலண்ட், 36 ஆட்டங்களில் 39 கோல்கள் அடித்துள்ளார்.
இவ்வேளையில், போர்ட்டோவுடனான ஆட்டத்தில் 0-0 என்று சமநிலை கண்டு காலிறுதிச் சுற்றுக்கு இண்டர் மிலான் அணி முன்னேறியது. போர்ட்டோவுக்கு எதிரான முந்திய ஆட்டத்தை 1-0 என்ற கோல் கணக்கில் இண்டர் வென்றிருந்தது. 2011க்குப் பிறகு இண்டர் மிலான் வெற்றியாளர் கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றுக்குச் சென்றிருப்பது இதுவே முதன்முறையாகும்.
2026 உலகக் கிண்ணக் காற்பந்தில்
12 பிரிவுகள், 104 ஆட்டங்கள்
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்தில் வழக்கமான 64 ஆட்டங்கள் இல்லாமல் 104 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதாக ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.
அப்போட்டி விரிவாக்கப்பட்டு 48 குழுக்கள் கலந்துகொள்வதே அதற்குக் காரணம்.
மேலும் மூன்று பிரிவுகள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 16 தரப்புகள் விளையாடலாம் என்ற யோசனை நிராகரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் நான்கு குழுக்கள் விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், குழுக்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து 12ஆக உயரும்.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் காற்பந்துக் கிண்ணத்தை 2026இல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளும் ஏற்று நடத்தும்.
ஃபிஃபா உலகக் கிண்ணம் 2030:
ஏற்றுநடத்த முயலும் மொரோக்கோ
வரும் 2030இல் நடைபெறவுள்ள 24வது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்றுநடத்தும் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியவற்றின் விண்ணப்பத்தில் மொரோக்கோவும் இணைந்துள்ளது. மொரோக்கோ அரசர் ஆறாம் முகமது அதை நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் இரண்டுடனும் உக்ரேன்தான் முதலில் சேர்ந்திருந்தது.
ஆனால் மொரோக்கோ தற்போது சேர்ந்துள்ளதால் போரால் அலைக்கழிக்கப்பட்டு வரும் உக்ரேன் அதில் இடம்பெறாது போக அதிக சாத்தியமுள்ளது.
ஃபிஃபா அமைப்பு அதன் ஆண்டுக் கூட்டத்தை நடத்திவரும் கிகாலியில், அரசர் முகமது அந்த கூட்டுவிண்ணப்பம் பற்றி அறிவித்தார்.
சென்ற ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மொரோக்கோ.
அனைத்து இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியில் லோ கியன் இயூ தோல்வி
அனைத்து இங்கிலாந்து பூப்பந்து பொதுவிருதுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே சிங்கப்பூர் விளையாட்டாளர் லோ கியன் இயூ நேற்று முன்தினம் வெளியேறியுள்ளார்.
சீனாவின் சாவ் ஜுன்பெங்கிடம் அவர் 21-16, 16-21, 21-7 எனும் புள்ளிக்கணக்கில் லோ தோற்றார். கடந்த 12 ஆட்டங்களில் லோவுக்குக் கிடைத்துள்ள ஆறாவது தோல்வி இதுவாகும். மேலும், சாவ்வை எதிர்த்து ஆடிய கடைசி ஐந்து ஆட்டங்களில் லோ இரண்டாவது முறையாகத் தோற்றுள்ளார்.
"பல்வேறு அம்சங்கள் இன்று சாதகமாக இல்லை. நான் சிறப்பான நிலையில் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிதோல்வி இயல்பானதுதான்," என்றார் லோ.

