பேங்காக்: தாய்லாந்தில் அனைத்துத் துப்பாக்கிகளையும் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 24 மழலையர் மாண்டனர். அதைத் தொடர்ந்து இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
துப்பாக்கிகள் வைத்திருப்போருக்கு அவற்றைப் பதிவுசெய்துகொள்ள 180 நாள்கள் வழங்கப்படலாம். அந்தக் காலகட்டத்தில் அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது என்று தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு வழிவகுக்கும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தங்களின் துப்பாக்கிகளைப் பதிவுசெய்யாதோர் அவற்றை அதிகாரிகளிடமும் ஒப்படைக்கலாம். அவ்வாறு செய்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சிறப்புக் காவல்துறைப் படையினரால் அடக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் மாண்டுவிட்டார்.
51 வயது கிட்டிக்கன் சாயெங்பூன் எனும் அந்த காவல்துறை அதிகாரி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று பேங்காக்கின் சாய் மாய் வட்டாரத்தில் தனது வீட்டிலிருந்து வானை நோக்கிச் சுட்டார். அவரைக் கட்டுப்படுத்த சுமார் 24 மணிநேரம் தேவைப்பட்டது.
கிட்டிக்கன்னை சிறப்புக் காவல்துறைப் படையினர் சுட்டனர். அதைத் தொடர்ந்து மருத்துவமனை ஒன்றில் அவர் உயிரிழந்தார்.

