செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d03c646e-e286-44d4-b708-b6e125536ca9
-

காற்பந்து: யூரோப்பா காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்

செவில்: நேற்று முன்தினம் பின்னிரவில் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் ஸ்பெயினின் ரியால் பெட்டிஸ் குழுவும் மோதின. இதில் யுனைடெட்டின் ரேஷ்ஃபர்ட் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பலம் கொண்டு உதைத்த பந்து கோல் வலைக்குள் விழ அந்தக் குழு 1-0 என வென்றது.

இதன்மூலம் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்ற மான்செஸ்டர் யுனைடெட் நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து 5-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த கோலையும் சேர்த்து ரேஷ்ஃபர்ட் இதுவரை விளையாடிய 24 ஆட்டங்களில் 19 கோல்கள் போட்டு யுனைடெட்டின் முன்னணி கோல் மன்னனாக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து சபிட்சர், ஜேடன் சான்சோ, வெக்ஹோர்ஸ்ட் போன்ற மற்ற யுனைடெட் வீரர்களுக்கும் கோல் போடும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும் அவர்கள் அனைவரும் அந்த வாய்ப்புகளை வீணடித்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

யூரோப்பா லீக் போட்டியிலிருந்து வெளியேறிய ஆர்சனல்

லண்டன்: நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றோர் யூரோப்பா லீக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்புகளில் தோல்வி கண்ட ஆர்சனல் யூரோப்பா லீக் போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆர்சனலின் ஸாக்கா ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் போட்ட கோலுக்குப் பதிலாக எதிர்த்து ஆடிய ஸ்போர்டிங் லிஸ்பன் குழுவின் பெரேரா கொன்சால்வஸ் ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் கோல் போட்டு சமன் செய்தார்.

ஆனால் பெனால்டி வாய்ப்புகளில் ஆர்சனலின் கேப்பிரியல் மார்டினேலி கோல் வாய்ப்பை தவறவிட, ஸ்போர்டிங் லிஸ்பன் குழுவின் நுனோ சான்டோஸ் ஐந்தாவது கோலையும் போட ஆர்சனல் இறுதியில் 5-3 என பெனால்டி வாய்ப்பில் தோல்வி கண்டது.

வாரணாசியில் அனைத்துலக கிரிக்கெட் மைதானம்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் புதிதாக அனைத்துலக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.