கோலாலம்பூர்: குறும்புத்தனமான ஒரு விளையாட்டு காரணமாக புத்திரி ரஃபசியா என்ற 12 வயது சிறுமி தற்பொழுது இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் உடல் செயலிழந்து போய் நடமாட முடியாமல் சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று, நாடகப் படப்பிடிப்பின் இடைவேளையில் ஓய்வாக அமர நாற்காலியை நாடிச் சென்றார் இவர்.
அச்சமயம் மற்றொரு குழுந்தை விளையாட்டாக இவர் உட்காரவிருந்த நாற்காலியை நகர்த்த, ரஃபசியா முக்காலி ஒன்றின் இரும்புக் கால்களில் விழுந்தார்.
இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்ததுடன் அவருடைய நரம்பு மண்டலத்தில ஏற்பட்ட காயம் காரணமாக உடலின் கீழ்ப்பகுதி செயலிழந்தது.
இதனால் இவர் தற்பொழுது சக்கரநாற்காலியின் துணையுடன்தான் நடமாடுவதாக மலேசிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தக் குறும்புச் செயலுக்குக் காரணமான பிள்ளை மற்றொரு நட்சத்திரத்தின் உறவினர் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும் அந்தப் பிள்ளை படமெடுக்கும் சமயம் படப்பிடிப்புக் கூடத்திலேயே இருந்திருக்கக்
கூடாது என்றும் கூறப்படுகிறது.
இம்மாதம் 10ஆம் தேதி இவர் தனது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் அதனால் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவரது தாயார்
கண்ணீர் மல்கக் கவலையுடன் கூறுகிறார்.

