வார்சா: ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு போரிட்டு வரும் உக்ரேனுக்கு போலந்து தனது மிக்-29 ரக போர் விமானங்களை தந்து உதவ உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஆன்ரெஸ் டுடா கூறியுள்ளார்.
"இதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது," என்று கூறிய அதிபர் டுடா, முதல் கட்டமாக தன்னிடமுள்ள 4 போர் விமானங்கள் அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளது என்றார்.
அத்துடன், பின்னர் தற்பொழுது பழுதுபார்ப்பில் உள்ள மற்ற போர் விமானங்களும் அனுப்பி வைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் வியாழக்கிழமையன்று விளக்கினார்.
இது ஒருபுறமிருக்க மற்ற நட்பு நாடுகளும் உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்ப தயார்நிலையில் உள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.
இதன் ஒருபடியாக, ஸ்லோவாக்கிய நாடு தன்னிடமுள்ள மிக் ரக போர் விமானங்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாகப் போரில் இறங்க விருப்பமில்லாமல் உள்ளன.
இந்நிலையில், போலந்து, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் போர் விமானங்களை அனுப்ப எடுத்துள்ள முடிவு புதிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் உக்ரேன் தனது ஆகாயப் படையை வலுவாக்க எண்ணம் கொண்டுள்ளது. இதற்காக அது அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களை கோரி வருகிறது.
ஆனால், அத்தகைய போர் விமானங்களை வழங்க அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்துள்ளது.
இந்நிலையில், மிக்-29 ரக போர் விமானங்கள் அதற்கு பேருதவியாக இருக்குமென அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்தப் போர் விமானங்களை இயக்குவதில் உக்ரேனிய போர் வீரர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருப்பதால் இது உக்ரேனுக்கு தேவையான ஆகாய பலத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

