நியூயார்க்: கொவிட்-19 கிருமி விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கக்கூடும் என்பதற்கான ஆராய்ச்சியை தடுத்ததாகவும் தரவுகளை மறைத்ததாகவும் சீனாவை உலக சுகாதார அமைப்பு சாடியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த தரவுகள் ஏன் தங்களிடம் பகிரப்படவில்லை என்று அது கேள்வி கேட்டுள்ளது.
சீனாவின் இத்தரவுகள் காணாமல் போவதற்கு முன், அனைத்துலக ஆய்வாளர் குழு அதனைப் பதிவிறக்கம் செய்து ஆராயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொவிட்-19 கிருமி பரவியிருக்கலாம் என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக அது இருந்ததாகவும் கருதப்படுகிறது.
ஆனால் ஆராய்ச்சியில் சீன அதிகாரிகளுடன் ஒத்துழைக்க அனைத்துலக நிபுணர்கள் முன்வந்தவுடன் மரபணு தகவல்கள் தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.
"இந்தத் தரவுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்," என்றார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரேஸ் அதனோம். மறைக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக பகிரப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
நிபுணர் குழு, நரி இனத்தைச் சேர்ந்த ரக்கூன் நாய்களிடம் இருந்து கிருமி பரவியிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக் கூறு உள்ளதாக கூறுகின்றன.

