கிட்டோ (எக்குவடோர்): லத்தின் அமெரிக்க நாடான எக்குவடோரின் தெற்குக் கடற்கரைப் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தால் குறைந்தது 15 பேர் மாண்டனர். 400க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
6.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் அண்டை நாடான பெருவின் வடக்குப் பகுதியிலும் உணரப்பட்டது. இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள பெருவின் தும்பஸ் மாநிலத்தில் ஒரு 14 வயது பெண் உயிரிழந்தார்.
நிலநடுக்கத்தால் தனது வீடு இடிந்துவிழுந்ததில் அப்பெண் மாண்டார்.
எக்குவடோரில் மக்காலா, குவென்சா உள்ளிட்ட நகரங்கள் ஆக அதிக பாதிப்புக்கு உள்ளாயின. அவற்றில் பல கட்டடங்களும் வாகனங்களும் சேதமடைந்தன.
நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள், கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரச் சேவைகளை வழங்கும் அமைப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.
எக்குவடோரின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான குவாயாகுவில்லுக்கு சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாலாவ் நகருக்கு அருகே நிலநடுக்கம் தொடங்கியது. அங்கு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதுவரை பொறுமையாக இருக்குமாறு எக்குவடோர் அதிபர் குவியர்மோ லாசோ தமது நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

