காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

2 mins read
860b06bb-c2ab-4dbc-acfe-068f1c5a23fa
-

தடுமாறிய செல்சி, ஸ்பர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த செல்சி, 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்த செல்சிக்கு எதிராக 89வது நிமிடத்தில் கோல் போட்டு சமநிலை கண்டது எவர்ட்டன்.

பெரும் சரிவை எதிர்கொண்டுவந்த செல்சி கடந்த சில வாரங்களாக நன்கு மீண்டது. அந்த வகையில் இந்த ஆட்டத்தின் முடிவு அதன் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்தது.

மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த டோட்டன்ஹெம் ஹாட்ஸ்பருக்கு எதிராக மீண்டுவந்து 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது, லீக் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் சவுத்ஹேம்ப்டன். சென்ற வாரம் மான்செஸ்டர் யுனைடெட்டை வெல்லவிடாமல் செய்த சவுத்ேஹம்ப்டன், ஸ்பர்சுக்கு எதிராகவும் தனது ஆற்றலை நிரூபித்தது.

இப்பருவத்தின்போது பல வேளைகளில் கவனக்குறைவுடன் ஆடி வந்துள்ளது ஸ்பர்ஸ்.

ஹாலண்ட் தரும் அடி மேல் அடி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் (படம்), கடந்த மூன்று ஆட்டங்களில் ஒன்பது கோல்களைப் போட்டு காற்பந்து உலகை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நேற்று முன்தினம் பின்னிரவில் நடைபெற்ற பெர்ன்லீக்கு எதிரான எஃப்ஏ கிண்ணப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் 6-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது சிட்டி. இந்த ஆட்டத்தில் மூன்று கோல்களைப் போட்டார் ஹாலண்ட்.

சென்ற வாரம் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் ஆர்பி லைப்ஸிக்கை 7-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது சிட்டி. அந்த ஆட்டத்திலும் ஹாலண்ட் ஐந்து கோல்களைப் போட்டு அசத்தினார்.

சில வாரங்களுக்கு முன்பு சற்று களையிழந்து காணப்பட்ட ஹாலண்ட் இப்போது மீண்டும் பழைய வேகத்துடன் விளையாடுகிறார்.