டெல் அவிவ்: இஸ்ரேலில் தொடர்ந்து 11வது வாரமாக நாடெங்கும் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு அந்நாட்டின் நீதித்துறையைச் சீர்திருத்தம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். அதை எதிர்த்து இஸ்ரேலிய மக்கள் பல நகரங்களிலும் பகுதிகளிலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
நீதித்துறை சீர்திருத்தத்தின் மூலம் இஸ்ரேலில் நீதிமன்றங்களைவிட அரசியல் தலைவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படலாம் என்ற அச்சம் தலைதூக்கியதே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணம். இதனால் நாட்டின் ஜனநாயக முறைக்கு ஆபத்து வரக்கூடும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கவலை.
டெல் அவிவின் டிஸென்கோஃப் சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலின் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் மையப் பகுதியை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறைத்தனர்.
ஹைஃபா, பீர்ஷெபா உள்ளிட்ட 100க்கும் அதிகமான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இவ்வாண்டு ஜனவரி மாதம் திரு நெட்டன்யாஹு பிரதமராகப் பதவியேற்று சில நாள்களுக்குப் பிறகு நீதித்துறை சீர்திருத்தம் குறித்து அறிவிக்கப்பட்டது. அதிலிருந்தே இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.

