பேங்காக்: தாய்லாந்தின் நாடாளுமன்றத்தை அந்நாட்டுப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா நேற்று கலைத்தார்.
தாய்லாந்தின் சட்டப்பட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் மே 7ல் தேர்தல் நடைபெறும் என்று தாய்லாந்தின் தேர்தல் ஆணையம் இப்போதைக்கு அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் நாள் மாற்றப்
படக்கூடும் என்று நம்பப்படுகிறது. அது மே 14ல் நடத்தப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஐந்து நாள்களுக்குள் தேர்தல் நாள் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் தினம் நடைபெறும். வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்ட பிறகு அது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதன் மூலம் தரமுள்ள வேட்பாளர்களை ஈர்க்க அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.
இத்தகைய சூழல் புதிய கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தாய்லாந்து சட்டப்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தலுக்கு முன்பு அந்தந்த கட்சிகளில் குறைந்தது 90 நாள்
களுக்கு முன்பு சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தின் நான்கு ஆண்டுகள் தவணை முடிந்தால் மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும்.
இம்மாதம் 23ஆம் தேதியுடன் தாய்லாந்தின் தற்போதைய நாடாளுமன்றத் தவணை நிறைவடைகிறது.
நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்குக் குறைந்தது 30 நாள்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தால் தேர்தலில் களமிறங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் தாய்லாந்து ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து திரு பிரயுத் நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
ராணுவ ஆதரவுடன் செயல்படும் பலாங் பிரசாரத் கட்சியி
லிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலகியதை அடுத்து மீண்டும் பிரதமராக இலக்கு கொண்டுள்ளார் திரு பிரயுத்.
ஆளும் கூட்டணிக்குத் தலைமைதாங்கும் பலாங் பிரசாரத் கட்சி திரு பிராவிட் வோங்சுவானை அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது.

