இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
அண்மையில் பாதுகாப்புப் படையினருடன் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். கடந்த வாரம் லாகூர் நகரில் இருந்த திரு கானைக் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது வன்முறை வெடித்தது. கடந்த சனிக்கிழமையன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் திரு கான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, இவ்விரு நகரங்களிலும் காவல்துறை நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வன்முறையில் ஈடுபட்டோரை கைது செய்தது.
"இம்ரான் கானின் கட்சியை ஆதரிப்பவர்களில் கிட்டத்தட்ட 285 பேர் இஸ்லாமாபாத்திலும் லாகூரிலும் கைது செய்யப்பட்டனர்.
"எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களின் வீடுகளில் நேற்றிரவு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது," என்று திரு கானின் உதவியாளர் திரு ஃபவாட் சௌத்ரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
70 வயது திரு கான் பல வழக்குகளை எதிர்நோக்குகிறார்.
பாகிஸ்தானின் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் திரு ஷெபாஸ் ஷரிஃப் தலைமையிலான அரசாங்கமும் ராணுவமும் செயல்படுவதாக திரு கான் குற்றம் சாட்டியுள்ளார்.

