கோலாலம்பூர்: மலேசியாவில் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய 526 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிக் கருவிகள் பொருத்தப்படுவதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள், சுற்றுப்புறம், வானிலை மாற்ற அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமது அறிவித்துள்ளார்.
சாபாவில் மொத்தம் 117, சிலாங்கூரில் 99, ஜோகூரில் 45, பாகாங்கில் 40, கெடாவில் 38 பினாங்கில் 27, தலைநகர் கோலாலம்பூரில் 24, சரவாக்கில் 23, நெகிரி செம்பிலானில் 21, மலாக்காவில் 13, பெர்லிசில் 12, லாபுவானில் 1, திரங்கானுவில் 10 எச்சரிக்கை ஒலிக் கருவிகள் பொருத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் தலா 28 எச்சரிக்கை ஒலிக் கருவிகள் பொருத்தப்படுகின்றன.
அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிக் கருவிகளை நீர்ப்பாசன, வடிகால் துறை பொருத்துவதாக அமைச்சர் நிக் நாஸ்மி கூறினார்.
மழையின் அளவையும் நீர் மட்டத்தையும் கண்காணிக்க தேசிய வெள்ள முன்னுரைப்பு, எச்சரிக்கை முறையை இத்துறை பயன்படுத்துவதாக அமைச்சர் நிக் நாஸ்மி தெரிவித்தார்.

