எஃப்ஏ கிண்ண அரையிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்
மான்செஸ்டர்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடெட் தகுதி பெற்றுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் அது ஃபுல்ஹம் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. புருனோ ஃபெர்னாண்டஸ் யுனைடெட்டுக்காக இரண்டு கோல்களைப் போட்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஃபுல்ஹம் குழுவின் இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் அதன் நிர்வாகி மார்க்கோ சில்வாவுக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஃபுல்ஹம் கோல் போட்டு முன்னிலை வகித்தது. இதனால் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக எஃப்ஏ கிண்ண அரையிறுதிக்கு ஃபுல்ஹம் தகுதிபெறும் என்று அதன் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் ஃபுல்ஹமின் வில்லியனுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அக்குழுவுக்கு அனைத்தும் இறங்குமுகமானது.
அடுத்தடுத்து கோல்களைப் போட்ட யுனைடெட் வெற்றிக் கனியைப் பறித்தது.
ரியால் மட்ரிட்டைத் தோற்கடித்த பார்சிலோனா; லீக்கில் முன்னிலை
பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்தாட்டத்தில் ரியால் மட்ரிட்டை 2-1 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா நேற்று முன்தினம் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் பார்சிலோனா 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரியால் கொண்டுள்ள இலக்கிற்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. இரு குழுக்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. கோல் போடும் பல பொன்னான வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் கிடைத்தன.
ஆனால் இறுதியில் பார்சிலோனா வெற்றி பெற்றுக் கொண்டாடியது.
எஃப் 1: முதல் இரண்டு இடங்களை வென்ற ரெட் புல்
ஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன்தின இரவு நிறைவடைந்த எஃப்1 கார் பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களையும் ரெட் புல் அணி தட்டிச் சென்றது. செர்ஜியோ பெரேஸ் முதலிடத்தையும் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
ஒரு கட்டத்தில் 15வது இடத்தில் இருந்த வெர்ஸ்டப்பன் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி இரண்டாவது இடம் பிடித்தார். ஒட்டுமொத்த அடிப்படையில் வெர்ஸ்டப்பன் 44 புள்ளிகளும் பெரேஸ் 43 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வரலாற்றில் மோசமான சாதனை
விசாகபட்டினம்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணி களும் சமநிலை பெற்றுள்ளது. 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் தோல்வி யால் இந்திய அணி மிக மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளது. 118 ஓட்டங்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா வெறும் 66 பந்துகளில் எட்டியது.

