கியவ்: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தமது நாட்டுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு (ஜப்பானுக்கும் உக்ரேனுக்கும் இடையே உள்ள) ஒற்றுமையையும் வலுவான ஒருமைப்பாட்டையும் சித்திரிக்கிறது. வருங்காலத்தில் நாம் வெற்றிபெறப் பங்காற்றியதோடு பேராதரவு அளித்துள்ள ஜப்பானுக்கு எங்கள் நன்றி," என்று உக்ரேனின் முதலாவது துணை வெளியுறவு அமைச்சர் எமீன் ட்ஷெப்பர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
உக்ரேனிய அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கியைச் சந்திக்க திரு கிஷிடா நேற்று ரயிலில் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டார். உக்ரேன்-போலந்து எல்லையில் இருக்கும் போலந்தின் ப்ர்ஸெமிஸ்ல் நகரிலிருந்து அவர் பயணம் மேற்கொண்டார்.
திரு கிஷிடா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் நடந்துகொண்டிருக்கும் ஒரு பகுதிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் ஜப்பானியத் தலைவர் ஆவார்.
இதற்கிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் இரண்டாவது நாளாக நேற்று சந்திப்பு நடத்தினர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ரஷ்யாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு ஸி, இவ்வாண்டு சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ளுமாறு திரு புட்டினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் பரிந்துரை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராய் இருப்பதாக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் நாள் சந்திப்பில் திரு புட்டின் தெரிவித்திருந்தார்.
"உக்ரேனில் நிலவும் நெருக்கடிக்குத் தீர்வுகாண உங்களின் பரிந்துரைகளை நன்கு ஆராய்ந்துள்ளோம்," என்று திரு ஸியிடம் கூறிய திரு புட்டின், "நீங்கள் வழங்கும் தீர்வு உட்பட இதன் தொடர்பில் எல்லா விவகாரங்களைப் பற்றியும் கலந்துபேசுவோம். நீங்கள் வழங்கும் தீர்வை நாங்கள் மதிக்கிறோம்," என்றும் குறிப்பிட்டார்.
போரைப் பற்றிப் பேசாத திரு ஸி, "ரஷ்யாவுடனான உறவை சீனா மிகவும் உயர்வாகக் கருதுகிறது," என்று சொன்னார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் திரு புட்டின் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவார் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் திரு ஸி குறிப்பிட்டார்.

