விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
ed95cb35-0cc7-4764-8fea-0370429c2148
-

மீண்டும் பேலஸ் நிர்வாகியாக ரோய் ஹோட்சன்

லண்டன்: முன்னாள் இங்கிலாந்து காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளரான ரோய் ஹோட்சன் மீண்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான கிறிஸ்டல் பேலசின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2021ஆம் ஆண்டு வரை ஹோட்சன் பேலசின் நிர்வாகியாக இருந்தார். ஓய்வுபெற்ற அவரின் பொறுப்பு ஒரு காலத்தில் ஆர்சனல் நட்சத்திரமாகத் திகழ்ந்த பேட்ரிக் வியேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்ற வாரம் வெள்ளிக்கிழமையன்று வியேரா பணிநீக்கம் செய்யப்பட்டார். பேலஸ் 12 ஆட்டங்களாக வெற்றிகாணாமல் இருந்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவானது.

அதையடுத்து அக்குழுவின் நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார் 75 வயது ஹோட்சன். அவர் இந்தப் பருவம் நிறைவடையும் வரை இப்பொறுப்பை வகிப்பார்.

பிரான்ஸ் அணித்தலைவராகும் கிலியோன் இம்பாப்பே

பாரிஸ்: உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகப் பலரால் கருதப்படும் பிஎஸ்ஜி குழுவின் நட்சத்திரம் கிலியோன் இம்பாப்பே (படம்) பிரான்ஸ் அணித்தலைவர் ஆகிறார். ஆகக் கடைசி நிலவரப்படி அணிக்கு நெருங்கிய தொடர்பு உள்ள ஒருவர் இதைத் தெரிவித்தார்.

முன்னதாக பிரான்ஸ் அணித்தலைவராக இருந்த கோல் காப்பாளர் ஹியுகோ லோரிஸ் அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அடுத்த அணித்தலைவராகப் பொறுப்பேற்க 24 வயது இம்பாப்பே ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு வெற்றியாளராகக் களமிறங்கிய பிரான்ஸ் மீண்டும் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. அதில் பிரான்ஸ், அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு லோரிஸ் அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வுபெற்றார்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டி 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெனால்டிகளின் மூலம் அர்ஜென்டினா வெற்றிகண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அந்த ஆட்டத்தில் பிரான்சின் மூன்று கோல்களையும் போட்டவர் இம்பாப்பே.

நவ்ரத்திலோவா: எனக்கு இப்போது புற்றுநோய் இல்லை

ஃபுளோரிடா: கடந்த நான்கு மாதங்களாகத் தனக்கு புற்றுநோய் இல்லை என்று தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற பெண்கள் டென்னிஸ் சகாப்தம் மார்ட்டினா நவ்ரத்திலோவா. மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் இரண்டும் தனக்கு இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 59 கிராண்ட் சிலாம் விருதுகளை வென்றுள்ள நவ்ரத்திலோவா, டென்னிஸ் வரலாற்றில் உலகின் ஆகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் தனது புற்றுநோய் முதல் தரநிலைக்குக் குறைந்ததாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

"எனக்குத் தெரிந்தவரை இப்போது எனக்குப் புற்றுநோய் இல்லை," என்றார் 66 வயது நவ்ரத்திலோவா. பிரபல நிகழ்ச்சிப் படைப்பாளர் பியர்ஸ் மோர்கன் நடத்திய நேர்காணலில் அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த நேர்காணல் நேற்று ஒளிபரப்பானது.

நவ்ரத்திலோவாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தெரியவந்தது. ஏற்கெனவே 2010ஆம் ஆண்டில் அவர் இந்நோய்க்கு ஆளாகி குணமடைந்தார்.