இந்தப் பருவத்தில் இனி டோமியாசு விளையாட மாட்டார்
லண்டன்: முழங்கால் காயம் காரணமாக ஆர்சனலின் டோமியாசு இனி இந்தப் பருவம் முழுதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்சனல் தெரிவித்துள்ளது. ஆர்சனல் முந்திய வாரம் வியாழக்கிழமையன்று போர்ச்சுகலின் ஸ்போர்டிங் லிஸ்பன் குழுவுடன் யூரோப்பா கிண்ணப் போட்டி ஒன்றில் மோதியது. அதில் ஆட்டம் தொடங்கிய ஒன்பதாவது நிமிடத்திலேயே திடலில் எதிரணி ஆட்டக்காரர் ஒருவருடன் மோதியதில் சுதாரிப்பு இல்லாமல் வழுக்கி விழுந்ததில் டோமியாசு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றிக் கூறிய ஆர்சனல் குழு நிர்வாகியான மிக்கெல் அர்டெட்டா, 24 வயது டோமியாசு எதையும் பெரிதுபடுத்தாத வீரர் என்பதால் அவர் தனக்குக் காயம் என்றவுடன் மிகுந்த கவலையடைந்ததாகத் தெரிவித்தார்.
"அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரரை களமிறக்கியபின் அவருடைய காயம் தொடர்பான பரிசோதனையில் அவருக்கு பலமான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
"அதையடுத்து அவருக்கு வலதுகால் முட்டியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவரால் இவ்வாண்டு மீதிப் பருவம் முழுக்க காற்பந்தாட்டம் விளையாட முடியாத நிலை உள்ளது," என்று ஆர்சனல் குழுவின் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கோன்டேயிடம் விளக்கம் கேட்கும் ஸ்பர்சின் ஹொய்பியே
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் ஒன்றில் சென்ற சனிக்கிழமை டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் செளத்ஹேம்டன் குழுவும் மோதின.
அதில் இரு குழுக்களும் வெற்றி தோல்வியின்றி 3-3 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டன.
அந்த ஆட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பர்ஸ் குழு நிர்வாகி கோன்டே, தமது வீரர்களுக்கு குழு ஒற்றுமை உணர்வு இல்லை என்றும் நெருக்கடி நேரத்தில் ஒருமித்த கவனம் செலுத்தி விளையாடத் தெரியவில்லை என்றும் கண்டபடி திட்டித் தீர்த்தார்.
கோன்டேயின் நிர்வாகத்தில் ஸ்பர்ஸ் குழு தற்பொழுது அவ்வளவாக சோபிக்கவில்லை. இதனால் அவரது ஒப்பந்தகாலம் முடியும் முன்னரே அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்பர்ஸ் குழுவின் மத்திய திடல் வீரரான பியர் எமில் ஹொய்பியே, கோன்டேயின் விமர்சனத்தை எடைபோடவும் தங்களைப் பற்றி தாங்களே மதிப்பிடவும் கோன்டே தமது விமர்சனத்தை இன்னும் தெளிவாகக் கூறவேண்டும் என்று கோரியுள்ளார். இதன்மூலம் கோன்டேக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

