சோல்: எதிர்வரும் ஜூன் மாதம் வடகொரியாவுக்கு தங்கள் ராணுவ வலிமையைக் காட்டும் நோக்கில் அமெரிக்கா, தென்கொரியா இரு நாடுகளும் மிகப் பெரிய அளவில் உண்மையான போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
அண்மைக் காலமாக ஏவு
கணைகள் பலவற்றை பாய்ச்சி பதற்றத்தை அதிகரித்துள்ள வடகொரியாவுக்கு தங்கள் ராணுவ வலிமையைக் காட்ட அமெரிக்காவும் தென்கொரியாவும் இந்தப் போர்ப் பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளன.
அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான ராணுவக் கூட்டணியின் 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாக இந்தப் போர்ப் பயிற்சி இடம்பெற
உள்ளது.
"வலிமையை காட்டி அதன் மூலம் அமைதியை அடையும் முயற்சியில் இந்த 70ஆம் ஆண்டு நிறைவில் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். வடகொரியாவின் தொடர் அணுவாயுத ஏவுகணை மிரட்டல்களுக்கு எதிராக எங்கள் உத்திபூர்வ தற்காப்பு திறன்களை விளக்கும் விதத்தில் எங்களது கூட்டு தற்காப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்," என்று தென்கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
"இந்த உண்மையான போர்ப் பயிற்சியின்போது எங்கள் கூட்டு ராணுவப் படைகளின் மிக சக்திவாய்ந்த போர்த்திறன், போரை முனைந்து எதிர்கொள்ளும் விதம் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவில் வெளிப்படும்," என்று தென்கொரியா கூறியது.

